Tuesday, May 10, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருவக்கரை


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவக்கரை

·   வராகநதியான சங்கராபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான கோயில்
·   சதுர அடிப்பாகத்தின் மீது அமைந்த வட்டமான ஆவுடையாரில் மூன்று திருமுகங்களுடன் கம்பீரமாக கிழக்கு நோக்கி திருக்காட்சி தரும் மூலவர்.
·   வக்கிரனை அழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்ற தலம்
·   ராஜகோபுரத்தின் இடப்பக்கம் வக்கிரகாளி அம்மன் சந்நிதி
·   காளியம்மன் சந்நிதி எதிரில் வக்ராசூரன் வழிபட்ட வக்கிரலிங்கம்(ஆத்மலிங்கம் , கண்டலிங்கம் )
·   நடராசர், வக்கிர தாண்வம் எனும் இடுப்புக்குமேல் வரை வளைத்து தூக்கிய திருவடியுடன் கால் மாறியாடும் திருக்கோல காட்சி அமைப்பு
·   உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் உடைய சந்நிதி.
·   குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன்  (வக்கிரன்) வழிபட்ட தலம்;  வல் + கரை - வலிய கரை, வற்கரை
·   வக்ராசூரனின் தங்கை துன்முகியை காளி சம்ஹாரம் செய்யும் போது வயிற்றில் குழந்தை இருந்த காரணத்தால் கருவில் உள்ள குழந்தையை குண்டலமாக ஆக்கிய் காதில் அணிந்திருக்கும் காட்சி.
·   சனிஸ்வரனின் காக வாகனம்  தென்திசை நோக்கி
·   கால மாற்றத்தால் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கல்லாக கல்மரங்களாக  மாறிக் காட்சியளிக்கின்றன
·   கருவறை , நந்தி , கொடிமரம் , ராஜகோபுரம் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் அமைந்துள்ளது



தலம்
திருவக்கரை
பிற பெயர்கள்
வக்ராபுரி, குண்டலிவனம் , துக்ரபுரி , வக்ரபுரிப்பட்டினம், பிறை சூடிய எம்பெருமான், ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்)
இறைவன்
சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
இறைவி
அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், பிரம்மா தீர்த்தம்,புண்ணிபுனல் தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 604304
தொலைபேசி : 9443251012, +91 - 413 - 2688949 , 2680870
வழிபட்டவர்கள்
வக்கிராசுரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திரு அருணகிரிநாதர்
நிர்வாகம்
இந்துசமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை - திண்டிவனம் - கூட்டேரிப்பட்டு - மயிலம் - பெரும்பாக்கம் – திருவக்கரை

சென்னை – பாண்டிச்சேரி – திருச்சிற்றம்பலம் கூட்ரோடு – பெரும்பாக்கம் – திருவக்கரை

விழுப்புரம் – முண்டியம்பாக்கம் – திருக்கனூர் – திருவக்கரை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில்  30    வது தலம்.

சந்திர மௌலீசுவரர்


அமிர்தேசுவரி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    8         

பாடல்

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.

பொருள்

அழகு பொருந்திய இலங்கை மன்னனான இராவணன் கலங்குமாறு, ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்திலும் தன் காற்பெருவிரலை ஊன்றி, அலறுமாறு செய்தவன். பின் அவனது ஆணவ செருக்கு நீங்கி, நல்ல சிந்தனையோடு ஈசனைப் போற்றி துதிக்க, ஈசன் அவனுக்கு வீரவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல்(சூலம்) ஏந்தி வீற்றிருந்து அருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.

கருத்து

·   மாயா மலங்களில் ஆணவ மலம் நீங்குமாறு செய்பவன் ஈசன். ஆணவத்தை விலக்கி உயிர்களுக்கு அருள் புரிபவன் என்பது துணிபு.
·   தன்னை அணுகியவர்களுக்கு வெற்றியும் அதனை அனுபவிக்கும் ஆயுளையும் தருபவன் ஈசன்


பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    9         

பாடல்

காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.

பொருள்

அழகிய வலிய தேகத்தை உடைய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி ரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்க சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்

கருத்து
·         ஈடு அழித்திட்டு - வலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து. (ஆணவம் முன்வைத்து)
·         உன்தனக்குச் சேமமே - உன் கண்ணுக்கு மட்டும் புலப்படுவான்



Reference
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே


(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)



No comments:

Post a Comment