Saturday, December 21, 2013

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் - 1

கந்தர் அலங்காரம்

நிலைலையாமைத் தத்துவம்

1.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18

விளக்கம்
வடிவேலோனை வாழ்த்தி - வடிவேலனை வாழ்த்தி
வறியவர்கென்றும் - வறியவர்களுக்கு
நொய்யிற் பிளவேனும் - மிகக் குறைந்த அளவு
பகர்மின்கள் - பகிராதவர்கள்
வெய்யிற்கு ஒதுங்க உதவா - உதவாது என்பது துணிபு.
இவ் வுடம்பின் வெறு நிழல் போல் - இந்த உடம்பின் நிழல்
கையிற் பொருளும் உதவாது - கையில் இருக்கும் பொருள் உதவாது
காணும் கடை வழிக்கே - இவைகள் கடை நாள் வரையினில் உதவாது.

பொருள்
வடிவேலனை வாழ்த்தி, வறியவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பகிராதவர்கள் பொருள்கள்,கடைசி நாள் வரையினில் இந்த உடம்பின் நிழல் வெய்யிற்கு ஒதுங்க உதவாது போல உதவாது.

கருத்து
நொய்யிற் பிளவேனும் - அரிசி உடைபடும் போது அதில் கிடைக்கும் மிக சிறிய அளவு உணவு நொய்.  அதில் மிக சிறிய அளவு கூட கொடுக்காதவர்கள். (யாவருக்கும் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்ற திருமந்திரம் இங்கு நினைவு கூறத் தக்கது.
காணும் கடை வழிக்கே - காதற்ற ஊசியும்..... வாரது காணும் கடை வழிக்கே  என்ற பட்டினத்தாரின் பாடல் நினைவு கூறத் தக்கது.

2.

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20

விளக்கம்
கோழிக் கொடியன் - அடி பணியாமல்
குவலயத்தே வாழ நினைக்கும் மதியிலி காள் - இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே
வல்வினை நோய் - வினையாகிய நோய்
ஊழிப் பெருவலி - ஊழ் வினையில் காரணமான பெரும் வலி
அத்தம் - செல்வம் எல்லாம்
ஆழப் புதைத்து - ஆழப் புதைத்து வைத்தால்

பொருள்
கோழிக் கொடியை கொடியாக கொண்டிருக்கும் அவனது தாளினைப் பணியாமல்  இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே, வினையாகிய நோய்யும், ஊழ் வினையில் காரணமான பெரும் வலியும் சேர்ந்து வருகையில் ஆழப் புதைத்து வைத்த செல்வம் அடுத்த பிறவியிலும் வருமோ(வராது என்பது துணிபு).

கருத்து
இறைவனை தலைவனாகவும், உயிர்களை தலைவியாகவும் வைத்துப் பாடுதல் மரபு. எனவே கோழிக் கொடியன் (சேவல் ஆண் - கோழி பெண்).
வல்வினை நோய் -  நோய் வலி தரக்கூடியது. அஃது ஒத்தே வினைகளும். மிக அதிக வினைகளின் காரணமாக வல்வினை
ஊழிப் பெருவலி - ஊழிப் பெருவலி  யாவுள என்ற குறள் இங்கு நினைவு கூறத் தக்கது.
அத்தம் - அத்தம் எல்லாம் குழைக்கும் என்ற அபிராமி அந்தாதி நினைவு கூறத் தக்கது.


No comments:

Post a Comment